சமூக ஊடகங்களில் சூடுபிடிக்கும் பேருவளை சுப்பர் மார்க்கட் விவகாரம் – நடந்து என்ன?
பேருவளை நகரில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் கிளையொன்றில் நேற்று மாலை (01/01/2018) , பேருவளை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் (சகோதரனும், 18 வயது சகோதரியும்) பொருட்களை வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் அதற்கான பணமும் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ”உங்களைச் சோதனை செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் பொருட்களை திருடியுள்ளதாக வாடிக்கையாளரொருவர் எங்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்” என காவலாளியொருவர் அந்தச் சகோதரியை மீண்டும் உள்ளே அழைத்துள்ளார். ”நாங்கள் திருடவில்லை” என இருவரும் கூறியபோதும் அவர்கள் பலாத்காரமாக அச்சகோதரியை உள்ளே அழைத்துச்சென்று பெண் காவலாளி ஒருவர் சோதனையிட்டுள்ளார். அச்சகோதரியின் நிகாப் (முகத்திரை) மற்றும் ஹபாயாவை கழற்றியே அப்பெண் காவலாளி சோதனையிட்டுள்ளார். சோதனை நடவடிக்கைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான திருட்டு பொருட்கள் எதுவுமில்லை எனக் காவலாளி கூறியுள்ளார்.
இவ்வாறு வீணாக மானபங்கப்படுத்தப்பட்டதன் காரணமாக அச்சகோதரி உள நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். இதன் காரணமாக குறித்த சுப்பர் மார்க்கட்டில் இருந்த ஏனைய முஸ்லிம் வாடிக்கையாளர்களும் இதற்கெதிராக நிர்வாகத்திடம் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதன்போது ஸ்தலத்திற்கு பேருவளை பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இத்துரதிஷ்டமான சம்பவத்தை அடுத்து விடுமுறையில் சென்றுள்ள கிளை முகாமையாளர் குறித்த சகோதரியின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.